காஜாங், பிப்.18-
மனைவியின் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான 60 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று காலை 11.05 மணியளவில் காஜாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.
கணவன், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம், பின்னர் அடிபிடி சண்டையாக மாறிய போது, 59 வயது மாது, தனது கணவனை கத்தியால் பல முறை குத்தியதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த மாது கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கத்தி மற்றும் இதர பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.
இத்தம்பதியர், கடந்த 1988 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் 37 ஆண்டு கால இல்லற வாழ்வு, இறுதியில் சோகத்தில் முடிந்துள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் நாஸ்ரோன் தெரிவித்தார்.