கோலாலம்பூர், பிப்.18-
கள்ள சந்தையில் தனிப்பட்ட தரவுகள் விற்பனையை கண்காணிப்பதற்கும், அவற்றை தடுப்பதற்கும் நாட்டில் முதல் முறையாக உளவுப்பிரிவு முறையை இலக்கவியல் அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த உளவுப்பிரிவு முறையானது, தனிப்பட்ட தரவுகள் கசிந்தால், அவற்றை தனது நுண்ணறிவு ஆதாரத்துடன் கண்டு பிடிக்கும் ஆற்றலை கொண்டது என்று நாடாளுமன்றத்தில் இன்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
Dark Web உட்பட ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் தனிப்பட்ட தரவுகளின் விற்பனை மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பிரச்னை குறித்து மக்களிடையே அதிகரித்து வரும் கவலைகள் மத்தியில் தரவுகள் கசிவதை தடுப்பதற்கு இத்திட்டம் உருவாக்கப்படவிருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.