நாட்டில் SK எனப்படும் தேசியப் பள்ளி, தரத்தில் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது அனைத்து மலேசியர்களுக்கும் அப்பள்ளி, சிறந்த தேர்வாக அமையவில்லை என்பதுடன் அப்பள்ளி ஒற்றுமைக்கான தலமாக விளங்கிடவில்லை என்று மூவார் எம்.பி. சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் மாமன்னர் உரை மீதான விவாவதத்தில் கலந்து கொண்டு பேசிய சைட் சாடிக், அன்றைய தேசியப் பள்ளிக்கும், தற்போது உள்ள தேசியப் பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பீடு செய்தார்.
லா சாலே பள்ளியை சைட் சாடிக் உதாரணம் காட்டினார். அந்தப் பள்ளி, பல இனம், பல மதத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியாகும். அதுமட்டுமின்றி B40, M40 மற்றும் T20 ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாக, சமமான அளவில் இருந்தார்கள்.
ஆனால், அதே பள்ளி இன்று முற்றிலும் மாறுப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. சீன சமூகமே இல்லாத பள்ளியாக அது மாறியுள்ளது. இது புதிய விஷயம் இல்லையென்றாலும், நடப்பு நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று சைட் சாடிக் குறிப்பிட்டார்.
முன்பு தேசியப் பள்ளிகள் மக்களின் முக்கிய தேர்வாக இருந்தது. தற்போது, அனைத்துலகப் பள்ளிகள் அல்லது தாய்மொழிப்பள்ளிகள் மக்களின் முக்கிய தேர்வாக மாறிக்கொண்டு இருக்கிறது.
இது குறித்து அரசாங்கமும், கல்வி அமைச்சும் விரிவாக ஆராய வேண்டும் என்று சைட் சாடிக் கேட்டுக்கொண்டார்.
தேசியப் பள்ளியின் தரமான கல்வி முறை, சரிந்து கொண்டு இருக்கிறது. நடுத்தர மாணவர்கள் அதிகமான பயில்கின்ற தேசியப் பள்ளியின் நடப்பு நிலை தொடருமானால், அது மாணவர்களை பாதிக்கக்கூடும் என்று சைட் சாடிக் தமது கவலையை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.