கோலாலம்பூர், பிப்.20-
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூவார் தொகுதிக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைப்பதற்கு தாம் மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து தனது தொகுதி மக்களுக்கு நிதி திரட்டவே தாம் மாடலாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நிதி கேட்டு 400 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரைக்கும் நிதி கிடைக்கவில்லை என்று கூறிய சைட் சாடிக், தம்முடைய தொகுதி மக்களுக்காக நிதி திரட்டுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நிதி திரட்டுவதற்கான மூவாரிலிருந்து நாடாளுமன்றம் வரை ஓடியிருப்பதாக குறிப்பிட்ட சைட் சாடிக் தற்போது மாடல் தோற்றத்தையும் ஏற்றுள்ளதாக கூறினார். மாடல் தோற்றம் ஏற்றது மூலம் தொகுதிக்கு 10 லட்சம் ரிங்கிட் திரட்டியிருப்பதாக தெரிவித்தார்.
தவிர வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு உள்ளூர் பேஷன் ஹவுசில், மலாய் பாரம்பரிய உடைகளின் மாதிரியை விளம்பரப்படுத்த மாடலாக தோன்றியிருப்பதாக சைட் சாடிக் குறிப்பிட்டார்.