மத்திய செயலவைப் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை

ஷா ஆலாம், பிப்.21-

டிஏபியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம். குலசேகரன், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான மத்திய செயலவைக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

புதிய தலைவர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை கட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று டிஏபியின் உதவித் தலைவரும், சட்ட சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சரான குலசேகரன் குறிப்பிட்டார்.

டிஏபியில் டாக்டர் வீ. டேவிட், P. பட்டு முதலிய தலைவர்களுக்கு அடுத்து கட்சியில் நீண்ட காலமாக முக்கியப் பதவிகளில் இருந்தவரும், நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன், அரசியலிருந்து ஒதுங்குகிறாரா? என்பது குறித்து அறிவிக்கவில்லை.

கடந்த 1997 ஆம் ஆண்டில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், விவசாயத்துணை அமைச்சருமான கெராக்கான் கட்சியைச் சேர்ந்த ஒங் திம் கிம் மரணமுற்றதைத் தொடர்ந்து அந்த ஆண்டில் மே 17 ஆம் தேதி நடைபெற்ற தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் முதல் முறையாக களம் இறக்கப்பட்ட குலசேகரன் மகத்தான வெற்றி பெற்றார்.

அதன் பிறகு அவர் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு கட்சியின் தலைமையகத்தினால் மாற்றப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS