துன் மகாதீரை சந்திப்பதிலிருந்து வெளிநாட்டுத் தலைவர்களை தடுத்தேனா? குற்றச்சாட்டை மறுத்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

ஷா ஆலாம், பிப்.21-

துன் மகாதீர் முகமதுவை சந்திக்க விரும்பிய வெளிநாட்டுத் தலைவர்களைத் தாம் தடுத்ததாக அந்த முன்னாள் பிரதமர் கூறிய குற்றச்சாட்டை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார். முதலில், எந்த வெளிநாட்டுத் தலைவர் துன் மகாதீரைச் சந்திக்க விரும்பினார் என்பதை அவரால் சொல்ல முடியுமா? என்று டத்தோஸ்ரீ அன்வார் வினவினார்.

மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டுத் தலைவர்கள் யாருமே துன் மகாதீரைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது கிடையாது. எனவே துன் மகாதீர் கூறியுள்ள அடிப்படையற்ற இத்தகைய குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தலைவர்கள், அப்படியே துன் மகாதீரைச் சந்திக்க விரும்பியிருந்தால், அவ்வாறு சந்திப்பதில் எந்தப் பிரச்னையும் தமக்கு இல்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

துன் மகாதீரின் பழைய நண்பர்கள், அவரைச் சந்திப்பதில் எனக்கென்ன பிரச்னை? சந்தித்துப் போகட்டுமே….. ஆனால், துன் மகாதீரை சந்திக்க விரும்பியதாக எந்த வெளிநாட்டுத் தலைவர்களும் கூறாத நிலையில், இதற்கு நான் எவ்வாறு பதில் அளிப்பது என்று டத்தோஸ்ரீ அன்வார் வினவினார்.

மத்திய கிழக்கு நாடான Bahrain- க்கு மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ வருகையை முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார், மலேசியாவிற்கு திரும்புவதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டுத் தலைவர்கள் தம்மை சந்திக்க விரும்பியும், டத்தோஸ்ரீ அன்வார் தடுத்து விட்டதாக துன் மகாதீர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்தது தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் பதில் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS