கோலாலம்பூர், பிப்.21-
தாங்கள் வேலை செய்து வந்த நகைக்கடையில், அசல் நகைகளைக் களவாடி, அவற்றுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து, கடை உரிமையாளரை ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்த மூன்று பெண் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 2024 ஆம்ஆண்டு முதல் நிகழ்ந்து வந்த இந்த நம்பிக்கை மோசடியில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரிங்கிட் மதிப்புள்ள 26 நகைகள் களவாடப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக இமிடேஷன் நகைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
நகைகள் குறித்து வழக்கமாக நடத்தப்படும் சோதனையின் போது, 26 நகைகள் போலியாவை என்பது கடை உரிமையாளர் கண்டறிந்தப் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இம்மாதம் 6 ஆம் தேதி 28 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று பெண் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாங்கள் களவாடிய 26 நடைகளும், அடகுக் கடைகளில் வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மூன்று பெண்களில் இருவர், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.