குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களுக்கு உச்ச நேர நெரிசலில் புதிய கட்டுப்பாடுகள் – லோஜிஸ்டிக் போக்குவரத்து சேவை சார்ந்த 5 சங்கங்கள் கடும் எதிர்ப்பு

இம்மாதம் 19 ஆம் தேதி முதல் DUKE மற்றும் ELITE நெடுஞ்சாலைகளிலும் கனரக வாகனங்களுக்கு உச்ச நேர நெரிசல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கும் மலேசியா நெடுஞ்சாலை வாரியமான LLM- முடிவுக்கு லோஜிஸ்டிக் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கனரக வாகனங்கள் சார்ந்த 5 சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2024 ஆம் அண்டு அக்டோபர் 21ஆம் தேதி அரசு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, லோஜிஸ்டிக் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் துறை சார்ந்த முக்கிய பங்காளிகளுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த 5 சங்கங்கள் கூறுகின்றன.

இது உண்மையிலேயே பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அந்த லோஜிஸ்டிக் போக்குவரத்து சேவையைப் பிரதிநிதிக்கும் 5 சங்கங்கள் தங்கள் ஆதாங்கத்தை வெளிப்படுத்தியுள்ளன.

மேற்கண்ட இரண்டு நெடுஞ்சாலைகளில் உச்ச நேர போக்குவரத்து நெரிசலில் கனரக வாகனங்கள் செல்வதற்கு மலேசிய நெடுஞ்சாலை வாரியம் விதித்துள்ள தடையானது, நாட்டின் லோஜிஸ்டிக் துறையின் முதுகெலும்பாக விளங்கும் கனரக வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த ஐந்து சங்கங்கள் கூறுகின்றன.

மலேசிய கொண்டெய்னர் லாரி சங்கம்,/ மலேசிய TRUCKING சம்மேளனம், MALAYSIA TIPPER LORRY OPERATOR சங்கம், MALAYSIA MOBILE CRANE உரிமையாளர்கள் சங்கம், மற்றும் PERSATUAN USAHAWAN LOGISTIK SEMENANJUNG MALAYSIA ஆகியவையே அந்த 5 சங்கங்கள் ஆகும்.

இதன் தொடர்பில் இத்துறையை சார்ந்த கூட்டாளர்களுடன் விவாதிக்கவும், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும், மாற்று வழிமுறைகளை ஆராயவும் ஐந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் ஒன்று திரண்டு, சம்மேளனத் தலைவர் டத்தோ ங் தலைமையில் ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், இந்த முடிவால் லோஜிஸ்டிக் போக்குவரத்து சேவையை வழங்கும் கனரக வாகன துறைக்கு கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று அந்த ஐந்து சங்கங்களும் நினைவுறுத்தியுள்ளன.

இந்த புதிய கட்டுப்பாடுகளினால் லோஜிஸ்டிக் சேவைகளின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்படும் என்று அந்த 5 சங்கங்ளும் கூறுகின்றன.

குறிப்பாக, இந்த புதிய கட்டுப்பாடுகள், விநியோக அட்டவணைகளை மீண்டும் அமைப்பதை மிகுந்த சிக்கலாக மாற்றும். சுருங்கச் சொன்னால், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாமதம், வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.

இதற்கு மேலாக அதிக செலவுகள் ஏற்படுத்த வல்லதாகும். குறிப்பாக, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம், மாற்றுப்பாதைத் தேடுதல், மற்றும் குறைந்த செயல்பாட்டு நேரம் முதலிய சிக்கல்களை ஏற்படுத்தும். தவிர, எரிபொருள் செலவு அதிகரிப்பு, வாகன பழுது ஏற்படும் அபாயம், மற்றும் ஒட்டுமொத்தச் செலவினங்களை உயர்த்தும்.

துறைமுகம் மற்றும் கிடங்குகளில் நெரிசலையும் ஏற்படுத்தும். துறைமுகங்கள், கண்டெய்னர் கிடங்குகள், மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி கிடங்குகளுக்கான சரக்கு நகர்வில் பெரும் இடையூறுகள் ஏற்படும். இதனால், மலேசியாவின் வலையமைப்பை வழிநடத்தும் தளமாக இருக்கும் லோஜிஸ்டிக் துறையில் போட்டி நிலைமை பாதிக்கப்படும்.

இதற்கு மேலாக டிரைவர் நலன் பாதிக்கப்படும். பணியாளர் குறைபாடு மேலோங்கும் என்று அந்த ஐந்து சங்கங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. இதன் தொடர்பில் மலேசியா போக்குவரத்து அமைச்சு மற்றும் அது தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசனை நடத்தி, இப்பிரச்னைக்கு சரியான தீர்வை காண தாங்கள் விரும்புவதாக அந்த 5 சங்கங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

WATCH OUR LATEST NEWS