MAHB பங்குகளை விற்பனை செய்து விட்டு அவற்றை மீண்டும் வாங்குவதா? ஈபிஎப். நடவடிக்கை குறித்து விசாரணை செய்வீர்

பெட்டாலிங் ஜெயா, பிப்.21-

தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஎப், Malaysia Airports Holdings Berhad-டில் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்து விட்டு, பின்னர் அதே பங்குகளை மீண்டும் வாங்கியது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டார்.

ஈபிஎப் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால், தொழிலாளர்களின் அந்திம காலத்திற்கான சேமிப்புப் பணத்தைப் பாதுகாத்து வரும் அந்த வாரியத்திற்கு 539 மில்லியன் ரிங்கிட் முதல் 694 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்று அம்னோ மூத்தத் தலைவரான தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் போலீஸ் துறையும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தன் வசம் வைத்திருந்த Malaysia Airports Holdings Berhad பங்குகளை, கடந்த 2023 ஆம் ஆண்டு பங்கு ஒன்றுக்கு 5 ரிங்கிட் 40 காசு முதல் 7 ரிங்கிட் 36 காசு வரை விற்பனை செய்த ஈபிஎப், பின்னர் அதே பங்குகளை அதிக விலை கொடுத்து பங்கு ஒன்று 11 ரிங்கிட் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

Malaysia Airports Holdings Berhad பங்குகளை குறைந்த விலைக்கு விற்று, பின்னர் அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்று தெங்கு ரசாலி கேள்வி எழுப்பினார்.

இந்த பங்கு கொள்முதலில் சில தரப்பினர் நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளனவா? என்பது குறித்து எஸ்பிஆர்எம் ஆராய வேண்டும் என்று தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS