பத்து பஹாட், பிப்.22-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 96 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், யொங் பேங் அருகில் நேற்று மாலையில் இரண்டு கார்கள் மற்றும் டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட விபத்தில் இரு பெண்கள் காயமுற்றனர்.
இந்த விபத்து தொடர்பாக மாலை 5.03 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்டை செயலாக்க அதிகாரி முகமட் ஷாரில் பின் ரசாலி தெரிவித்தார்.
ஆயர் ஹித்தாம் மற்றும் யொங் பேங் ஆகிய நிலையங்களிலிருந்து விரைந்த வீரர்கள், இவ்விபத்தில் டிரேலர் லோரி ஒன்று, தொயோத்தா வியோஸ் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய மூன்று கார்கள் சம்பந்தப்பட்டிருந்தைக் கண்டனர்.
இதில் பெரோடுவா மைவி காரில் பயணித்த இரு பெண்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர். தீயணைப்புப்படையினர் விரைவதற்குள் பொது மக்களின் உதவியுடன் அவ்விரு பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று முகமட் ஷாரில் குறிப்பிட்டார்.
அந்த டிரேலர், சாலையின் குறுக்கே சிக்கிக்கொண்டதால் இதர வாகனங்கள் அப்பகுதியை கடக்க முடியாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்..