பத்தாங் காலி, பிப்.22-
சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் காலை நேர தொழுகையில் ஈடுபட்ட சிறுமி ஒருவரை, அவ்விடத்திலிருந்து தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக நம்பப்படும் இளைஞரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அந்த இளைஞரை விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் காலை 8.19 மணியளவில் பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞர் நண்பகலில் கைது செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்றும் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.