கோலாலம்பூர், பிப்.22-
ஒரு மாற்றுத் திறனாளியான ஆடவர் ஒருவரின் உடல், இன்று காலையில் கோலாலம்பூர் தித்திவங்சா எல்ஆர்டி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதையில் கண்டு பிடிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை 8.38 மணியளவில் MERS- 999 மூலமாக அவசர அழைப்பு பெறப்பட்டதாக கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை அறையின் தலைவர் ஃபாடில் ஹேசாம் முகமட் தெரிவித்தார்.
அந்த மாற்றுத் திறனாளி இறந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்த மாற்றுத் திறனாளி, உடல் சமநிலையற்ற நிலையில் ரயில் இருப்புப் பாதையில் விழுந்து இருக்கலாம் என்றும் தானியங்கி முறையில் ரயிலை இயக்கும் மையத்தில் உள்ள ஆப்ரேட்டர் இதனை கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
புலன் விசாரணைக்கு ஏதுவாக LRT PWTC, செந்தூல் மற்றும் செந்தூல் தீமோர் ஆகிய ரயில் நிலையங்களில் எல்ஆர்டி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எல்ஆர்டி ரயில் சேவையை வழிநடத்தும் ரபிட் ரேல் நிறுவனம் அறிவித்துள்ளது.