கோலாலம்பூர், பிப்.22-
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினால் பண நெருக்கடியை எதிர்நோக்கி வந்ததாக நம்பப்படும் வர்ததகர், ஒருவர், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றப் பின்னர் தன்னையும் கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.32 மணியளவில் காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் உள்ள ஒரு வீடமைப்பு பகுதியில் நிகழ்ந்தது. தனது தாயாரைக் கொன்று விட்டு தனது தந்தை , தற்கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளார் என்று அவரின் 35 வயது மகனிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
போலீசார் வீட்டை சோதனையிட்ட போது, உள்ளூரைச் சேர்ந்த 63 வயது மாது, படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த வர்த்தகரும் உடலை ரணப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். அந்த வர்த்தகர், கைது செய்யப்பட்டதுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.
தனது துணைவியாருடன் 36 ஆண்டு கால இல்லற வாழ்க்கையில் வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புக்கு பின்னர் அந்த வர்த்தகர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.