வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தொழிலாளர்களைக் கொண்டு வருவதில் குடிநுழைவுத்துறையின் முன்னாள் உயர் அதிகாரி மூளையாக செயல்பட்டுள்ளார்

கோலாலம்பூர், பிப்.22-

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதில் பாகிஸ்தான் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் மலேசிய குடிநுழைவுத்துறையின் முன்னாள் உயர் அதிகாரி என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது டத்தோ அந்தஸ்தில் உள்ள அந்த முன்னாள் குடிநுழைவுத்துறை அதிகாரி, பணி ஓய்வுப் பெற்ற பின்னர் பாகிஸ்தான் ஏஜெண்டுகளுடன் கூட்டு சேர்ந்து, பாகிஸ்தான் உட்பட இதர நாடுகளிலிருந்து தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

A மற்றும் B என இரு பிரிவுகளாக சட்டவிரோதத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதில் அந்த முன்னாள் உயர் அதிகாரி கருப்பு ஆடாக செயல்பட்டுள்ளார் என்று குடிநுழைவுத்துறையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த முன்னாள் உயர் அதிகாரி, நேரடியாக தனது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்ளவில்லை என்ற போதிலும் பாகிஸ்தான் கும்பலுக்கு தொழிலாளர்களின் கோட்டாவை ஒதுக்கித் தருவதிலும், அவற்றை அங்கீகரிப்பதிலும், விமான நிலையத்தில் அந்த தொழிலாளர்கள் எவ்வாறு லாவகமாக நுழைந்து, மலேசியாவிற்குள் காலெடுத்து வைக்க முடியும் போன்ற துல்லியமான விவரங்களை வகுத்து,அவற்றை அமல்படுத்துவதில் அந்த முன்னாள் உயர் அதிகாரி பெரும் மூளையாக இருந்து, பின்னணியில் செயல்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

அந்த உயர் அதிகாரியின் மகன், தற்போது குடிநுழைவுத்துறையில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS