புத்ராஜெயா, பிப்.22-
மாற்றுத் திறனாளி குழந்தையைச் சித்ரவதை செய்ததாகச் கூறப்படும் புகார் தொடர்பில் ஷா ஆலாமில் உள்ள ஒரு மழலையர் பள்ளியை மூடும்படி சமூக நல இலாகா உத்தரவிட்டுள்ளது.
அந்த மழலையர் பள்ளியை சேர்ந்த குழந்தை பராமரிப்பாளர் ஒருவர், 4 வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தையை சித்ரவதை செய்யும் காட்சி தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட்டதில் சமூக நல இலாகா இம்முடிவை எடுத்துள்ளதாக அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் பெற்றோர் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள சமூக நல இலாகா அலுவலகத்தில் புகார் செய்திருந்தனர்.