கோலாலம்பூர், பிப்.22-
நாட்டின் பிரதமராக 22 ஆண்டு காலம் தாம் பொறுப்பு வகித்த போது, தம்முடைய செல்வாக்கின் மூலமாகவே தமது மகன்களை செல்வந்தர்களாக்கினேன் என்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இதுவரையில் எந்தவோர் ஆதாரத்தையும் காட்டவில்லை என்று துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமர் பொறுப்பிலிருந்து தாம் விலகியப் பின்னரே தமது மகன்கள் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கியதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
துன் மகாதீரின் மகன்கள் கோடிக் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களுடன் மிகப் பெரிய செல்வந்தர்களாக உள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.