எல்ஆர்டி இருப்புப் பாதையில் மாற்றுத் திறனாளி உயிரிழந்த சம்பவம்: விரிவான விசாரணை நடத்தப்படுகிறது

கோலாலம்பூர், பிப்.22-

இன்று காலையில் கோலாலம்பூர், தித்திவங்சா எல்ஆர்டி ரயில் நிலைய இருப்புப் பாதையில் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்திற்காக தமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சு, தற்போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், குறிப்பாக பிரசாரானாவுடன் அணுக்கமாக ஒத்துழைத்து, விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தவிர, அனைத்து ரயில் நிலையிங்களிலும் பயணிகளுக்கு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மறு மதிப்பீடு செய்து, அவற்றை மேம்படுத்துமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரசாரானா சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இடரை விளைவிக்கும் நடவடிக்கைகளை கண்டறிய ஸ்மார்ட் சிசிடிவி எல்லா நிலையங்களிலும் பொருத்தப்படும்.

பயணிகளின் நீடித்த பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அனைத்து எல்ஆர்டி வழித்தடங்களிலும் பிஎஸ்டி எனப்படும் Platform Screen கதவுகளை நிறுவுவதற்கு பிரசாரானா திட்டம் கொண்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS