ஈப்போ, 23-
சிறிய அளவிலான குப்பைகளை வீசும் குற்றத்திற்காக 12 மணி நேரம் சமூகச் சேவை செய்வது மீதான உத்தரவு அமலாக்கம் இவ்வாண்டே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகச் சேவை செய்வதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அதன் தொடர்பாக சட்டம் இவ்வாண்டே அமல்படுத்தப்படும். 2026 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சுமார் 35 மில்லியன் சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மலேசிய மீது நற்தோற்றத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம் என ங்கா கோர் மிங் விளக்கினார்.
பொது இடங்களில் தூய்மையைப் பேணுவது அவசியம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் அதே வேளை விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே சமூகச் சேவை உத்தரவு அமலாக்கத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.