ஈப்போ, பிப்.23-
பேரா, தாமான் ஹூவர், ஜாலான் சுங் ஆ மிங்கில் கடை வீடொன்றில் டியூஷன் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கழுத்திலும் கையிலும் கூர்மையான ஆயுதத்தால் கீறப்பட்ட அடையாளங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அந்த டியூசன் ஆசிரியையின் கணவர் அச்சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 5.30 அளவில் புகார் கொடுத்ததாக ஈப்போ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் சஜிடான் அப்துல் சுகோர் தெரிவித்தார்.
இறந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண் தமது மன உளைச்சலையும் அழுத்தத்தையும் சில தினங்களுக்கு முன் மேற்கொண்ட கண் அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வலியையும் கணவரிடம் கூறியிருந்ததாக அறியப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் மற்றும் நோயியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்மரணத்தில் சந்தேகப்படும்படியான பிற அம்சங்கள் ஏதும் இல்லை. அவரது அருகில் மடக்கக்கூடிய கத்தியும் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை குற்றச்செயல் கூறுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முகமட் சஜிடான் குறிப்பிட்டார்.