சிலாங்கூர் தடுப்பு மையத்தில் சித்ரவதை சம்பவம் இல்லை – மலேசிய குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர், பிப்.23-

சிலாங்கூரில் குடிநுழைவுத்துறைத் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவதை மலேசிய குடிநுழைவுத்துறை மறுத்திருக்கிறது. எடிசி சியாசாட் தெலிகிராமில் பரவலாகப் பகிரப்பட்டிருந்த அச்செய்தி உண்மையில்லை என மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெளிவுபடுத்தினார்.

குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் உள்நிலை அளவில் சரிபார்த்ததில் அத்தகைய சித்ரவதை சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்ததற்கான பதிவு இல்லை. நடப்பில் உள்ள அமலாக்க நடைமுறைகளுக்கு ஏற்ப தடுத்து வைக்கப்படும் அனைவரும் நல்ல நிலையிலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதாக டத்தோ ஸாகாரியா கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யாரேனும் கட்டொழுங்கை மீறினால், கமாண்டன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு உறுதிச் செய்யப்பட்டு 2003 ஆம் ஆண்டு தடுப்பு மைய நிர்வாக குழுநுழைவு விதிமுறைகளின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிகையொன்றின் வழி டத்தோ ஸாகாரியா தெரிவித்தார். அதே சமயம் தடுப்பு மையப் பகுதியில் சிசிடீவி கேமரா உள்ளது என்றும் அதில் சந்தேகப்படும்படியான நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சிலாங்கூர் குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் சித்ரவதை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி முன்னதாக எடிசி சியாசாட் தெலிகிராமில் செய்தி பகிரப்பட்டிருந்தத. அங்கு தமது சகோதரர் குடிநுழைவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுவதாகவும் சித்ரவதைச் சம்பவத்தை அவர் நேரில் கண்டதாகவும் நபர் ஒருவர் கூறியிருந்ததை அடுத்து அச்செய்தி வைரலானது.

WATCH OUR LATEST NEWS