நன்கொடை திரட்டும் இயக்கம் தொடர்பில் விசாரணை

கோலாலம்பூர், பிப்.23-

வர்த்தகர் ஒருவர் சமூக ஊடகத்தில் மேற்கொண்டு வரும் நன்கொடை திரட்டும் இயக்கங்கள் தொடர்பில் காவல் துறை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி புகார்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அவ்வாறு செய்யப்படுவதாக கூட்டரசு வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார். அதில் தொடர்புடைய சில பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வறிய நிலையில் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட பலருக்கு ஆயிரக்கணக்கான ரிங்கிட்களைத் திரட்டி அவர் உதவ வேண்டியவர்களுக்கு அதனைச் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. கஷ்டத்தில் உள்ளவர்களின் நிலையை எடுத்துக் கூற சம்பந்தப்பட்ட அந்த வர்த்தகர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருகிறார். அவரிடம் உதவி கோரியவர்கள் அந்த காணொளியில் காணப்படுவார்கள். நன்கொடை வழங்குவோர் உதவி கோருவோரின் வங்கிக் கணக்கு எண்களைப் பெறும் வேளை, அந்நபர் அவர்களின் வங்கி அட்டைகளைத் தன் வசம் வைத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

தங்களுக்காகத் திரட்டப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அந்த ஆடவர் ஒப்படைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தங்களது வங்கி அட்டையை மீண்டும் பெற்று வங்கிக் கணக்கைச் சரிபார்த்த பிறகு அவ்விவரம் தங்களுக்குத் தெரிய வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

WATCH OUR LATEST NEWS