பாங்கி, பிப்.23-
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளுக்கான ஒதுக்கீட்டு நிதியைப் பெற தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இதுவரை இருந்ததில்லை என பிரதமர் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் ஆவதற்கு முன்னரே தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர். அத்தகையதொரு நிபந்தனை ஏதுவுமே இல்லை என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு குறித்து துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப்புடன் கலந்துரையாடுமாறு அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கினார்.
அவ்வாறு கலந்துரையாடுவது புதிய விஷயம் அல்ல. தாம் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே அந்த நடைமுறை இருந்தது. ஒன்பதாவது பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தாம் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடியிருப்பதை டத்தோஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்க தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திப்பீர்களா என வினவப்பட்டதற்கு, அதற்கு அவசியமில்லை. அது குறித்து ஒருமித்த கருத்தை எட்டும் அதிகாரம் துணைப்பிரதமர் ஃபாடில்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு பெற அரசாங்கத்துடன் விவாதிக்குமாறு மக்களவைச் சபாநாயகர் டான்ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கூறியிருந்தது தொடர்பில் டத்தோஶ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.