கூலிம், பிப்.23-
கூலிம் தாமான் கெனாரியில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியின் மின்தூக்கி நுட்பக் கோளாறினால் செயல்படாமல் நின்று விட்டத்தால் ஒரு குழந்தையுடன் வாடிக்கையாளர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டதாக கூலிம் மாவட்ட உதவி தீயணைப்புப் படையின் தலைவர் ஹமிஸூல் அஸ்வான் பின் ஹம்டான் தெரிவித்தார்.

நேற்று இரவு 9.26 மணி அளவில் 999 எண் மூலமாக கூலிம் மாவட்ட தீயணைப்பு இத்தகவலைப் பெற்றத்தாக அவர் கூறினார். தீயணைப்பு அலுவலகத்திலிருந்து ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த தங்கும் விடுதிக்கு 8 தீயணைப்பு அதிகாரிகள் விரைந்ததாக ஹமிஸூல் அஸ்வான் தெரிவித்தார். இவர்களுக்குத் துணையாக காவல்துறையினரும் சுகாதார இலாகா அதிகாரிகளும் உடன் சம்பவம் இடத்திற்குச் சென்றனர்.

தொடர்ந்து , தங்கும் விடுதியின் முதலாவது மாடியின் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட 11 இளைஞர்களையும் 1 குழந்தையும் இரண்டாவது மாடியின் மின்தூக்கி கூரையின் வழியாக பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக சுகாதார இலாகாவின் அதிகாரிகள் முதலுதவி வழங்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக ஹமிஸூல் அஸ்வான் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
ஆகவே , தீயணைப்புப் படையின் நடவடிக்கை இரவு 11.27 மணி அளவில் முடிவுற்றது.