கட்டுமானத் தள ஊழியரை குண்டர் கும்பல் தாக்கவில்லை

கோலாலம்பூர், பிப்.23-

சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் கட்டுமானத் தளமொன்றில் தொழிலாளர் ஒருவர் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை காவல் துறை மறுத்துள்ளது. அக்கட்டுமானத் தளத்தில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளி ஒருவர் தம்மை ஓர் உள்நாட்டு ஆடவர் தள்ளியதாகப் புகார் கொடுத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். அச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளியும் அவரது சுமார் பத்து சக ஊழியர்களும் மூன்று மாதங்களாக வழங்கப்படாத சம்பளம் குறித்து கோரிக்கை எழுப்பிய போது, அந்த உள்நாட்டு ஆடவர் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அச்சமயம் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல் குண்டர் கும்பல் தாக்குதல் ஏதும் இல்லை என வான் அஸ்லான் தெளிவுபடுத்தினார். சித்ரவதை சட்டத்தின் 323 பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS