ஈப்போ, பிப்.23-
பேரா மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் தவணைக் காலம் இன்னும் மூன்றாண்டுகளை எட்டாததால், ஆயர் கூனிங் சட்ட மன்ற இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ சராணி முகமட் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் பின்னர் கூட்டம் நடத்தினால், இடைத் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை அது முடிவு செய்யும். வழக்கமாக தொகுதி காலியான 60 நாட்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சராணி தெரிவித்தார். ஆயர் கூனிங் சட்ட மன்ற தொகுதி காலியானது குறித்து எஸ்பிஆரிடம் கூடிய விரைவில் தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயர் கூனிங் மன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இஷ்சாம் ஷாருடின் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அத்தொகுதி காலியாகியுள்ளது. பினாங்கில் நட்புமுறை கால்பந்தாட்டத்தில் பங்கேற்றிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.