விளம்பரங்களை அகற்றுமாறு இரு இணைய விற்பனைத் தளங்களுக்கு உத்தரவு

லங்காவி, பிப்.23-

கண் வடிவிலான ஜவ்வு அல்லது gummy மிட்டாய்களை விற்பது மீதான விளம்பரங்களை அகற்றுமாறு இரு இணைய விற்பனைத் தளங்களுக்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அவ்விரு இணைய விற்பனைத் தளங்களிலும் அவ்வகை மிட்டாய் விளம்பரங்கள் தொடர்பில் 86 தொடர்பு இணைப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் நடவடிக்கையின் கீழ் அவ்விளம்பரங்களை அகற்றும் உத்தரவு வெளியிடப்பட்டதாக அவர் விளக்கினார். அதே சமயம் நாடு முழுவதும் வர்த்தகத் தளங்களில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவ்வகை மிட்டாய்களை விற்கப்பட்டால் பறிமுதல் செய்யுமாறும் மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பினாங்கில் 10 வயது சிறுவன் ஒருவன் கண் வடிவிலான பெரிய ஜவ்வு மிட்டாயை உண்டதில் அது தொண்டையில் சிக்கி மருத்துவ சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தான். பட்டர்வொர்த்தைச் சேர்ந்த அச்சிறுவன் சமயப் பாடத்திற்கு முன் அம்மிட்டாய்களை வாங்கியதாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS