புத்ராஜெயா, பிப்.23-
அமலாக்க அதிகாரிகள் எந்தவிரு தரப்பினருக்கும் எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இம்ராஹிம் அவ்வாறு கூறியிருக்கிறார். அரச மலேசிய காவல் படை, உள்நாட்டு வருவாய் வாரியம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அதிகாரத்துவ தரப்புகள் தத்தம் கடமைகளைச் செய்வதில் அரசாங்கம் இடையூறாக இருந்ததில்லை. அமைச்சரவையும் அதில் தலையிட்டதில்லை என பிரதமர் தெளிவுபடுத்தினார்.
சிலர் தாம் பகைமை கொண்டிருப்பதாகவும் குற்றம் கண்டுபிடிப்பதாகவும் கூறுகின்றனர். அது உண்மையில்லை. தாம் முழுமையாக சுதந்திரம் வழங்குவதாகவும் அதில் தங்களது தலையீடு இருக்கக்கூடாது என அமைச்சரவையிடம் கூறியிருப்பதாகவும் டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஊழல் போன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகளைத் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் தரப்புகள் முடிவு செய்கின்றன. அதில் தலையிடுவது சரியில்லை என பிரதமர் தெரிவித்தார்.