ஈப்போ, பிப்.24-
பேரா, தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் பாரிசான் நேஷனல் போட்டியிடுவதற்கு அமானா கட்சி வழிவிடும் என்ற அதன் பேரா மாநில தலைவர் டத்தோ அஸ்முனி ஆவி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல், தனது பாரம்பரியத் தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு அதன் வெற்றியை அமானா கட்சி உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட தாப்பா அம்னோ தலைவருமான அவர், 2,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.