கோலாலம்பூர், பிப்.24-
சுவாராம் மனித உரிமை அமைப்பின் இரண்டு சமூக ஆர்வலர்களையும், மற்றொரு நபரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சு கைவிட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புத்ராஜெயாவில் தடை விதிக்கப்பட்ட பகுதி என்று வகைப்படுத்தப்பட்ட உள்துறை அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்ததற்காக மூவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு உள்துறை அமைச்சு திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி, அதன் திட்டமிடல் அதிகாரி அஸுரா நஸ்ரோன் மற்றும் மற்றொரு நபர் மீது குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்க்குமாறு ராயர் கேட்டுக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 11 அம் தேதி சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன்புறம் 32 சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதையும், அவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கோரியே உள்துறை அமைச்சுக்கு மகஜர் கொடுக்க மூவரும் சென்றதாக ராயர் விளக்கினார்.
மனித உரிமைக்காக போராடும் எம்.பி.க்கள் என்ற முறையில் மனித உரிமையை முன்வைத்து மகஜர் கொடுக்க சென்றவர்கள் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு கொண்டு வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று ராயர் விளக்கினார்.