கோலாலம்பூர், பிப்.24-
தொடக்கப்பள்ளிகளின் வரலாற்று பாடப் புத்தகங்களில் மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த டிஏபி மலாக்கா எம்.பி. Khoo Poay Tiong, நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
மலேசியர்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே ஒருமைப்பாட்டு உணர்வை விதைப்பதற்கு ஒவ்வொரு இனத்தவரின் சிறப்புகள் குறித்து வரலாற்றுப் பாடப் புத்தகங்ளில் இடம் பெற செய்ய வேண்டும் என்று அந்த எம்.பி. வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான 50 ஆண்டு கால தூதரகத் தொடர்புக்குரிய பொன் விழா கொண்டாடப்பட்டது.
இது ஏதோ சீனாவுடன் மலேசியா கொண்டுள்ள ஒரு புதிய தொடர்பாக ஓர் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போல் இளைய தலைமுறையினர் கருதக்கூடும்.
ஆனால், மலாயாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்பு, மலாக்கா மூலமாக சீன தளபதி Cheng Ho வாயிலாக ஏற்பட்டது என்பதை இளைய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று Khoo Poay Tiong வலியுறுத்தினார்.
அதேவேளையில் இந்த வரலாற்று உண்மை, இன்றைய சரித்திர பாட நூலில் ஒரு வரியைக் கூட காண முடியவில்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக்கை நோக்கி Khoo Poay Tiong கேள்வி எழுப்பினார்.