செபராங் பிறை மாநகர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு மாபெரும் பொங்கல் விழா

செபராங் பிறை, பிப்.24-

பினாங்கு, செபராங் பிறை மாநகர் மன்றத்தின் இந்திய பணியாளர்களின் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த், Dewan Dato Haji Ahmad Badawi மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் சர்மார் தலைமையில் மாநகர் மன்ற இந்திய பணியாளர்களுடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் பொங்கல் நிகழ்வில் மாநகர் மன்ற பணியாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பனர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியர்களின் கலை, கலாச்சாரத்தையும், அவர்களின் பாம்பரியத்தையும், தொன்மை வாய்ந்த விளையாட்டுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் அதேவேளையில் பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வருடாந்திர நிகழ்வு, பிற்பகல் 4.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கின் , செபராங் பிறை மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் Dato Haji Baderul Amin Abdul Hamidi, ஆனந்த பவன் உணவக உரிமையாளர் டத்தோ ஹரிகிருஷ்ணன், பினாங்கு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவரும், ஜெயா உணவக உரிமையாளருமான டத்தோ J. தினகரன், மலேசிய இந்திய வர்த்தக, தொழில் சபையின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ S. பார்த்திபன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

சிறார்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள், அழகு ராணிப் போட்டி, கோலம் போட்டி, உரி அடித்தல், இசை நாற்காலி, கிராமிய நடனங்கள், கவர்ச்சிகரமான 100 பரிசுகளை தாங்கிய அதிர்ஷ்டக் குலுக்கல் என பலதரப்பட்ட நிகழ்வுக்கள் படைக்கப்பட்டு, விழாவிற்கு மெருகூட்டப்பட்டது.

முன்னதாக, ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜு, மாநகர் மன்றத் தலைவர் Dato Haji Baderul Amin, சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்களை உரிமைமேள இசையுடன் பிரதான மண்டபத்தை நோக்கி செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் சர்மார் அழைத்து வந்தார்.

தைமாதம் முடிந்தும், மாசி மாதம் வரையில் இடைவிடாமல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்த போதிலும் மாதம் ஓடினால் என்ன? நமது கலாச்சாரம், பண்பாடு கட்டிக்காக்கப்பட வேண்டும் என்ற வேட்கையில் இவ்வருடத்திற்கான பொங்கல் விழாவை விடாப்பிடியாக நின்று, வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கும் ஏற்பாட்டுக்குழுவினரைப் பாராட்டுவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுந்தராஜு தெரிவித்தார்.

இவ்விழாவை இளைஞர்கள் முன்னெடுத்து நடத்துவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் விவரித்தார்.

செபராங் பிறை மாநகர் மன்ற பணியாளர்களுடனான உறவை வலுப்படுத்தவும், நமது கலாச்சாரங்கள் விட்டுப் போகாமல் இருப்பதற்கும் ஆண்டு தோறும் இந்த பொங்கல் விழாவை தாங்கள் முன்னெடுத்து வருவதாக செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் சர்மார் தெரிவித்தார்.

டாக்டர் ஹரி சத்தியாவின் விறுவிறுப்பான மற்றும் கலகலப்பான அறிவிப்பு, பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

விழாவிற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் ஆர்வலர்களான Vimana Bikers, Tribal Riders, Copra Sangam, BMC மற்றும் Cholan Bikers ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுந்து, விழாவிற்கு வருகை தந்தது, மக்களின் பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

WATCH OUR LATEST NEWS