பெட்டாலிங் ஜெயா, பிப்.25-
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தாங்கள் சித்ரவதைக்கு ஆளாகியதாக சொஸ்மா கைதிகள் தெரிவித்துள்ள புகார் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்படுவதற்கு அவர்கள், தங்கள் வழக்கறிஞர்களுடன் போலீஸ் நிலையத்திற்கு செல்ல சிறைச்சாலை இலாகா அனுமதிக்க வேண்டும் என்று சொஸ்மா கைதிகளை பிரதிநிதிக்கும் இரண்டு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
சொஸ்மா கைதிகளை முன்நிறுத்தியே இப்போலீஸ் புகார்கள் செய்யப்படவிருப்பதால் வழக்கறிஞர்களுடன் சொஸ்மா கைதிகள், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
கடந்த வாரம், 32 சொஸ்மா கைதிகள் மீதான வழக்கு விசாரணை கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, சுங்கைப் பூலோ சிறைச்சாலையில் தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக நீதிபதியிடம் அவர்கள் நேரடியாக புகார் அளித்து இருப்பதை வழக்கறிஞர் ராஜேஸ் சுட்டிக் காட்டினார்.
அதேவேளையில் இது தொடர்பில் போலீசில் புகார் செய்யும்படி கைதிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியிருப்பதையும் ராஜேஸ் விளக்கினார்.