பெட்டாலிங் ஜெயா, பிப்.25-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டது, அவர்களில் ஒருவரின் வீட்டில் 10 கோடி ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டது, பல மாதங்களாக அணுக்கமாக கண்காணிக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் உதவியாளர்களுக்கு எதிராக கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணம் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முக்கிய புள்ளிகளுக்கு எஸ்பிஆர்எம் விரைவில் அழைப்பானை அனுப்பவிருக்கிறது.
இஸ்மாயில் சப்ரியின் மூத்த அதிகாரி ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட அந்த 10 கோடி ரிங்கிட் பணம் அரசியல் நிதியுடன் தொடர்புடையதா? அல்லது வேறு விதமாக கிடைக்கப்பெற்ற பணமா? என்பது குறித்து எஸ்பிஆர்எம் பல கோணங்களில் தனது விசாரணையை முடுக்கியுள்ளது.
இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது, சில முக்கிய ஆவணங்கள், தங்க ஆபரணங்கள், மின்னியல் பதிவுகள் உட்பட வழக்கு தொடர்பிற்குரிய முக்கிய பொருட்களை எஸ்பிஆர்எம் மீட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 10 கோடி ரிங்கிட், அந்த வீட்டில் உள்ள அறைகளில் பல கைப்பைகளிலும், இரும்புப் பெட்டியிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.