தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம், 3 மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், பிப்.25-

தாதியர்களுக்கான வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தாதியர்களுக்கான 45 மணி நேர வேலை முறை, வரும் மார்ச் முதல் தேதி சனிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிலுவையில் உள்ள விவகாரங்கள் காரணமாக இந்த உத்தேச வேலை முறை திட்டம், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், இன்று செவ்வாய்க்கிழமை, காலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் ஓர் அவசர சந்திப்பை நடத்திய போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தாம் ஒருவரே செனட்டர் என்று குறிப்பிட்ட டாக்டர் லிங்கேஸ்வரன், அதிகரித்து வரும் மருத்துவக் காப்புறுதிக் கட்டணம், சுகாதார சேவையில் உ ள்ள பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறை திட்டம் குறித்து தாம் பேசியதாகவும், அந்த நடைமுறை ஏற்புடையது அல்ல என்பதை அமைச்சரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தம்முடைய இந்த வாதத்திற்கு பெந்தோங் எம்பி யாங் ஷேவூரா ஒத்மான், ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் இணக்கம் தெரிவித்ததாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS