கோலாலம்பூர், பிப்.25-
இன்று மக்களவையில் தமிழ்ப்பள்ளிகள் நலன் சார்ந்த விவகாரங்கள் விகவாதிக்கப்பட்டது. பிற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நெடுநாள் சவால்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும், தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உடனடியாக களையப்பட வேண்டும் என்பதில் தாம் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கோபிந்த் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தீர்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தாம் இந்தப் பிரச்சனையைக் களைய, குறிப்பிட்டத் தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கோபிந்த் சிங் விளக்கினார். மேலும் தமிழ்ப்பள்ளி விவகாரம், தனது கடமைகளில் ஒன்று என்பதையும் கோபிந்த் சிங், மக்களவையில் தெளிவுபடுத்தினார்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் புரிந்து, அதற்கேற்ப உடனடித் தீர்வை எட்ட, தாம் மேற்கொண்ட முயற்சிகளில் கல்வியமைச்சும், இதர அமைப்புகளும் தமக்கு துணை புரிந்ததை கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.
பினாங்கு சுங்கை பாக்காப் , பகாங் ஜெராம் தோட்டம், கெடா கத்தும்பா தோட்டம் முதலிய மூன்று தமிழ்ப்பள்ளிகள் நீண்ட காலமாக பல சவால்களை எதிர்நோக்கியிருந்தன.
முன்னதாக, இந்த மூன்று தமிழ்ப்பள்ளி விவகாரம் குறித்து பேசிய ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், இந்தப் பள்ளிகளுக்கு விரைவில் தீர்வையும், விடியலையும் ஏற்படுத்துதற்கு முற்பட்டுள்ள இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்கை வெகுவாகப் பாராட்டினார்.