சக நண்பரை கொலை செய்து புதைத்ததாக 7 பேர் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, பிப்.26-

நண்பர் ஒருவரை அடித்துக் கொலை செய்து, அவரின் உடலை குளியல் தொட்டியில் மறைத்து, புதைத்ததாக உள்ளூர் ஆடவர் ஒருவர் மற்றும் 6 மியன்மார் பிரஜைகள் ஆகியோர் கெடா சுங்கை பட்டாணி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 35 வயது கே. கணேசன் மற்றும் 28 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 மியன்மார் பிரஜைகள், மாஜிஸ்திரேட் கைராதூல் அனிமா ஜெலானி முன்னிலையில் நிறுத்தப்பட்டு கொலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கணேசனின் வீட்டில் வேலை செய்து வந்ததாக நம்பப்படும் மியன்மார், ரொஹிங்யா இனத்தைச் சேர்ந்த அப்துல் காய்ர் அப்துல் கலாம் என்ற நபரை அடித்துக் கொன்ற பின்னர் அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்ததாக அந்த எழுவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கணேசனின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகளைக் களவாடிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த மியன்மார் பிரஜை, உண்மையைச் சொல்லும் வரை அவரைக் கட்டிவைத்து அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் எழுவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS