சிப்பாங், பிப்.26-
இவ்வாண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தில் ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட்டுக்கு விதிக்கப்படும் உதவித் தொகைக்கான உச்சவரம்பு கட்டணமான 499 ரிங்கிட்டை அரசாங்கம் தொடர்ந்து வழங்கவுள்ளது.
இது தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் இடையே பயணிக்கும் பயணிகள் குறிப்பாக, மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அனைத்து மலேசியர்களுக்கும் விமானப் பயண டிக்கெட் மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அசல் டிக்கெட் விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்திற்கான தொகையை அரசாங்கம் ஏற்கும் என்று அந்தோணி லோக் விவரித்தார்.
”இது நிச்சயமாக ஒரு நல்ல திட்டமாகும். இதை நாங்கள் வரவேற்கிறோம். பண்டிகைக் காலத்தைக் கொண்டாட, குறிப்பாக நோன்பு பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் சுமையைக் குறைக்க ஏர் ஆசியாவின் கூடுதல் முயற்சி இதுவாகும் என்றார் அவர்.
விமானப் போக்குவரத்துத் துறையினர் உடனான இந்த ஒத்துழைப்பு, மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக லோக் கூறினார்.
சிலாங்கூர், சிப்பாங் ஏர் ஆசியா அலுவகத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நிலையான கட்டண விகித அறிவிப்பு நிகழ்ச்சியில் அந்தோணி லோக் உரையாற்றினார்.