ஹனோய், பிப்.26-
தாம் அதிகமாகப் பயணிக்க வேண்டாம் என்று உபதேசம் செய்து வருகின்றவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாகச் சாடினார்.
அறிவுரை என்ற பெயரில் தமக்கு இவ்வாறு உபதேசம் செய்கின்றவர்கள், நாட்டிற்காக முதலீடுகளைத் தேடுவதில் தாம் மேற்கொண்டு வரும் கடின உழைப்பை அறிந்திருக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஒரு வர்த்தக நாடாக மலேசியா உருவாக வேண்டுமானால் நாட்டிற்குள் அதிகமான முதலீடுகளை கொண்டு வரப்பட வேண்டும். ஏனெனில், முதலீடுகள் இல்லாமல் தொழில் வாய்ப்புகள் இல்லை. தொழில் வாய்ப்புகள் இல்லையென்றால், வேலை வாய்ப்புகளும் இல்லை.
முதலீடுகள்தான் ஒரு நாட்டின் துரித வளர்ச்சிக்கு உதவுகிறது என்று வியட்நாமிற்கு இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், தலைநகர் ஹனோயில் இன்று மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தாம் வெளிநாடுகளுக்கு அதிகமாக செல்ல வேண்டாம் என்றும் அதிக தூரம் நடக்க வேண்டாம் என்றும் சில தரப்பினர்கள் தமக்கு உபதேசம் செய்து வருவது தொடர்பில் அன்வார் எதிர்வினையாற்றினார்.
மலேசியாவிலிருந்து நேற்று இரவு ஹனோய் வந்து சேர்ந்தோம். ஹோட்டலுக்கு செல்வதற்கு முன்பு இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டோம். ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. அதனை முடித்துக் கொண்டு மற்றொரு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்த சந்திப்பில் மறுநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தூதர், நள்ளிரவு வரை விளக்கம் அளித்தார்.
இன்று காலை 7 மணிக்கு இரு தரப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் வியட்நாம் வெளியுறவு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆசியான் எதிர்காலம் மீதான கலந்தாய்வுக் கூட்டத்தில் பிரதான உரை நிகழ்த்தினேன்.
பின்னர் வியட்நாம் பிரதமர் Phan Minh- னுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon- னுடன் இருவழி சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பு முடிந்தவுடன் Timor- Leste அதிபர் Jose Ramos – Horta- வை சந்திக்க வேண்டியிருந்தது.
வியட்நாம் பயணத்தில் இந்த இரண்டு நாளில் ஓய்வின்றி உழைக்கிறேன். கோல்ப் போன்ற விளையாட்டில் பங்கேற்பதற்கு மூட நான் நேரம் ஒதுக்கிக் கொள்வதில்லை என்று செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.