சிரம்பான், பிப்.26-
சிவபெருமானைப் போற்றும் சிவராத்திரி விழா, இன்றிரவு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் தொடங்கியது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேவஸ்தான அந்தஸ்தைப் பெற்ற முதல் ஆலயமான சிரம்பான் , தாமான் துவாங்கு ஜபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரி விழா, சிறப்பு வழிபாடு களை கட்டியது.
இரவு 7.31 மணியளவில் மூத்த பிள்ளையார் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் , அபிஷேக ஆதாரனைகள், அம்மை அப்பர் நன்னீராட்டு தரிசனம், யாகசாலை பூஜை, பால் அபிஷேகம், கபாள மாலை அணிவிப்பு நிகழ்வுடன் சிவராத்திரி விழா தொடங்கியது.

சிவபெருமானின் அடையாளப் பிரதிப்பலிப்பாகத் திகழும் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்யும் நிகழ்வும் ஏக காலத்தில் தொடங்கியது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் உதவிக் குருக்கள் முன்னிலையில் தொடங்கிய சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் இரவு 9 மணி வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இரவு முதல் விடியற்காலை வரை பக்தர்கள் கண்விழித்து 4 கால பூஜைகளிலும், அபிஷேக ஆதாரனைகளிலும் பங்கு கொள்வதற்கும், சிவபெருமானைத் தரிசிப்பதற்கும், தியானிப்பதற்கும் ஆலய நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளது.