10 வயது சிறுமியை மானபங்கம் படுத்தியதாக மாற்றுத் திறனாளி மீது குற்றச்சாட்டு

அம்பாங், பிப்.27-

கடந்த வாரம், சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் காலை நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த பத்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று மானபங்கம் புரிந்ததாக காணொளி ஒன்று வைரலான சம்பவத்தில் தொடர்புடைய மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் , இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

19 வயது முகமட் அடாம் ஹாய்கால் அப்துல்லா என்று மாற்றுத் திறனாளி இளைஞர், நீதிபதி நோர்ஷீலா கமாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின் தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என்பதற்கு அடையாளமாக அந்த இளைஞர் தலையை அசைத்ததுடன், குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.

அந்த இளைஞருக்கு எதிராக தீர்ப்பு வரும் மார்ச் 27 ஆம் தேதி அளிக்கப்படும் என்று அறிவித்த நீதிபதி நோர்ஷீலா கமாருடின், அதற்கு முன்னதாக அந்த இளைஞர் தொடர்புடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு சமூக நல இலாகாவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 6.20 மணியளவில் பள்ளி வாசலில் நடந்த இச்சம்பவத்தில் அந்த மாற்றுத் திறனாளி குற்றவாளி என்ற உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படும்.

WATCH OUR LATEST NEWS