திடீர்த் தேர்தல் குறித்த வதந்திகளைப் பரப்பி மக்களை குழப்ப வேண்டாம்

கிள்ளான், பிப்.27-

நாட்டில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறும் என வதந்திகளைப் பரப்பி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு அனைத்து தரப்பினரையும் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கேட்டுக் கொண்டார்.

இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் அரசியல் நிலைத்தன்மைக்கு ஊறு விளைக்கும் என்பதோடு தேசிய ஒற்றுமைக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் இனங்களுக்கிடையே வெறுப்புணர்வையும் பிளவையும் ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வழங்கிய ஆலோசனையை தாம் இங்கு சுட்டிக் கட்ட விரும்புவதாகவும் பாப்பாராய்டு தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் என்பது பிரதமரும் மாட்சிமை தங்கிய பேரரசரும் முடிவு செய்யக்கூடிய விஷயமாகும். அது எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு உட்பட்டதல்ல. மேலும், எதிர்க்கட்சி அணி முன்னாள் பிரதமர்கள், மூத்த அமைச்சர்களை உள்ளடக்கியுள்ளது. திடீர்ப் பொதுத் தேர்தல் வரும் என்ற அறிவிப்புகள் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பர்.

இத்தகைய அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்றச் செய்திகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை நிறுத்தி வைப்பதற்கு அல்லது ஒத்தி வைப்பதற்குரிய சூழலை ஏற்படுத்தும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS