பெண் பாதுகாவலரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் தேடப்படுகிறார்

கோலாலம்பூர், பிப்.27-

தனது காதலை நிராகரித்து விட்ட பெண் பாதுகாவலர் ஒருவரைக் கழுத்தை நெரித்து, கடுமையாகத் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்ற ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி,. A.A. அன்பழகன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில் பூச்சோங், பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் பாதுகாவலர் கண்காணிப்பு சாவடி அறையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் 32 வயது பெண்ணிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் ஒன்றை பெற்றிருப்பதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

தாம் தற்போது விவகாரத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அந்த நபரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, தனக்கு அறிமுகமான அந்த நபரின் காதலை அப்பெண் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமுற்ற அந்த ஆடவர், சம்பந்தப்பட்ட பாதுகாவலர் பெண்ணை, பாதுகாவலர் அறையிலேயே தாக்கியதுடன் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளார் என்று அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று அன்பழகன் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் , பெண் பாதுகாவலரைச் சரமாரியாக தாக்குவதை உடன் இருந்த பாதுகாவலர் தடுத்து நிறுத்தியதாக அறியப்படுகிறது.

இது தொடர்பாக 29 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று சமூக வலைத்தங்களில் பகிரப்பட்டு வருவதையும் அன்பழகன் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS