தாப்பா, பிப்.27-
தனது தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் உள்ளூரைச் சேர்ந்தவர், வேட்பாளராக நிறுத்தப்படுவது, அத்தொகுதியை பாரிசான் நேஷனல் தற்காத்துக் கொள்வதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தாம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்தப் பகுதியில் வசிப்பவர்கள், வெளிவேட்பாளர் நிறுத்தப்படுவதில், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
எனினும் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது UMNO- வைப் பொறுத்ததாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இந்த இடைத் தேர்தலில், PDM எனப்படும் ஆறு மாவட்ட வாக்குப்பதிவு மையங்களில் குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவை ஈர்க்க மஇகா கடுமையாக பாடுபடும் என்று அவர் கூறினார்.
ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி முழுவதும் 6 PDM- மையங்களிலும் முழு கவனம் செலுத்தப்படும். இவற்றில் ஒரு PDM மையத்தில் கிட்டத்தட்ட 1,400 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மற்றொரு PDM- மையத்தில் 600 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு மேற்பட்ட மையங்களில் தோரயமாக 400 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
நேற்று இரவு பேரா, தாப்பா மஇகா கட்டிடத்தில் மஇகா தாப்பா தொகுதி பொறுப்பாளர்களுடன் நடத்தப்பட் ட சிறப்பு சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.