ஜார்ஜ்டவுன், பிப்.27-
பினாங்கு தீவில் தஞ்சோங் பூங்கா – தெலுக் பஹாங் கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டு, வரும் 2026 ஆம் ஆண்டில் அதன் நிர்மாணிப்புப் பணி தொடங்கும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.
2.4 பில்லியன் ரிங்கிட் செலவிலான இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் 10.61 கிலோ மீட்டர் தூரமாகும். இது, பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 46 பில்லியன் ரிங்கிட் செலவினத்தில் பினாங்கு போக்குவரத்து பிரதான திட்டத்தில் ஒரு பகுதியாகவும் இது விளங்கும் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.
இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங் வரையிலான பயண நேரத்தை 45 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்க வல்லதாகும் என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாக்கத்தை இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் வெகுவாகக் குறைக்கும் என்றும் சோவ் கோன் யோவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.