கோலாலம்பூர், பிப்.27-
கடந்த மாதம் சீனப்புத்தாண்டு தினத்தன்று, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்திற்கு முன்புறம், கார்கள் மோதப்பட்டு நடத்தப்பட்ட அராஜகச் செயலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
24 வயது எம். தேவேந்திரன் என்ற அந்த இளைஞர், நீதிபதி எகுஸ்ரா அலி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி காலை 6 மணியளவில் Top Plus Club கேளிக்கை மையத்தின் முன்புறம், பொது மக்களுக்கு மரணத்தை விளைவிக்கும் நோக்கில் சுய உணர்வோடு, காரை மிக அபாயகரமாகச் செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தேவேந்திரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தேவேந்திரன் அபாயகரமாக செலுத்திய காரில் மோதுவதிலிருந்து 40 வயது மாஹாரிப் மஹாலி மற்றும் 19 வயது அரிப் ஜமாலுடின் ஆகியோர் உயிர் தப்பியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 307 பிரிவின் கீழ் தேவேந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 க்கு மேற்பட்ட இளைஞர்களை போலீசார் தேடி வந்த வேளையில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் தேவேந்திரன் பெற்றோர் தனது மகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தேவேந்திரன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உ த்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.