கோலாலம்பூர், பிப்.27-
நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றான உலோகப் பொருள், மறுசுழற்சி தொழில் துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக பொருள், மறுசுழற்சி தொழிலியல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தொழில்துறையில் உள்ளூர் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டதாத நிலையில் பெரும்பாலோர் அந்நியத் தொழிலாளர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை செய்வதற்கு அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால், இத்துறையை சார்ந்த தாங்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக மிம்தாவின் தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம், சங்க உறுப்பினர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தில் 640 உறுப்பினர்கள் முறையாக லெசென்ஸ் பெற்று கடைகளை நடத்தி வருகின்றனர்.
அனைவரும் அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர். 3டி எனப்படும் கடினமான, அசுத்தமான, ஆபத்தான இந்த துறையில் வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் முன் வருவதில்லை.
ஆனால், இத்துறையில் வேலை செய்யக்கூடிய அந்நியத் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் சங்க உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர் என்று டத்தோஸ்ரீ ஆறுமுகம் குறிப்பிட்டார்.
நாட்டின் குப்பைகளை அகற்றவதிலும், அவற்றை அழிப்பதிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் தங்களைப் போன்ற உலோக பொருள் மறுசுழற்சி தொழில் துறையை சார்ந்தவர்களும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
நாங்கள் ஒரு வகையில் நாட்டையும் சுத்தம் செய்து வருகிறோம். அதேவேளையில் அரசாங்கம், ஆதாயம் பெறும் வகையில் வரியையும் செலுத்தி வருகிறோம். அதிகமாக வரி செலுத்தி வருகின்ற தொழில் துறையினரில் நாங்களும் முக்கியமாக இருக்கிறோம்.
ஆனால், அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் தொடர்ந்து இழுத்தடிக்கும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஆறுமுகம் விவரித்தார்.
இந்தியா, நேப்பாளம் மற்றும் வங்காளதேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்கள் எங்களுக்கு உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
குறிப்பாக மொத்தம் 10,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். முன்பு அந்நியத் தொழிலாளர் ஒருவர் நாடு திரும்பினால் அவருக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளர் வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை.
நிலைமை இப்படியே போனால், இத்துறையை சார்ந்த தாங்களில் பலர், கடைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவே தாங்கள் எதிர்நோக்கியுள்ள அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.