கோலாலம்பூர், பிப்.28-
வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கு டிஏபியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய செயலவையில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று லிம்மை கடுமையாகக் குறை கூறி வந்த தலைவரான தெங் சாங் கிம், கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
வரும் கட்சித் தேர்தலில் அவசரப்பட்டு லிம் குவான் எங்கை அகற்றிவிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது டிஏபிக்கு தலைமையேற்றுள்ள புதிய தலைமுறையினர் நாட்டின் நடப்பு அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியில் தங்களின் அடைவு நிலை மற்றும் திறன் மிகுந்த செயல்பாட்டை இன்னும் நிரூபிக்கவில்லை.
எனவே பழைய தலைவர்களைக் கழட்டிவிடும் போக்கை அவசரக் கதியில் அரங்கேற்றிவிடக்கூடாது என்று தெங் சாங் கிம் வலியுறுத்தினார்.
டிஏபியில் பல ஆண்டு காலமாக கோலோட்சி செய்து வந்த கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் அவரின் வாரிசுகளை சரமாரியாகக் குறைகூறி வந்த தலைவரான தெங் சாங் கிம் முதல் முறையாக லிம்மிற்கு ஆதரவாக இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
டிஏபி தொடர்ந்து வலுவடையும், திறன்மிகுந்த செயல்பாட்டை நிரூபிக்கவும் பழைய தலைவர்கள் தொடர்ந்து தேவை என்று அவர் வலியுறுத்தினார்.