கோலாலம்பூர், பிப்.28-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் அரசாணை உத்தரவு தொடர்பில் விவாதம் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் தற்போது, சட்டப்பூர்வமாகக் கையாளப்பட்டு வருகிறது. அதனை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
அதேவேளையில் கூடுதல் அரசாணை உத்தரவைப் பொறுத்தவரையில், அது பொறுப்பான மற்றும் நம்பகமான தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. எனவே இவ்விவகாரத்தை ஆளுக்கு ஆள் விவாதிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுல்தான் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் 16 ஆவது மாமன்னராக பொறுப்பேற்று இருந்த சுல்தான் அப்துல்லா, தமது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்ட கூடுதல் அரசாணை உத்தரவின்படி நஜீப், தனது எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இவ்விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளது.