புத்ராஜெயா, பிப்.28-
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடற்படை கேடட் பயிற்சி மாணவன் சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னாயின் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு முன்னாள் மாணவர்கள், தூக்கிலிருந்து தப்பினர்.
அந்த ஆறு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று 18 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றியது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி டத்தோஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம், அறுவருக்கு எதிரான தூக்குத் தண்டனையை ரத்து செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதி செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்த அந்த பயிற்சி மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து அவரைக் தாக்கியதாக நம்பப்படும் அந்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.