விஜயன் மரணம்- விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, பிப்.28-

தைப்பிங் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எம். விஜயன், கடந்த மாதம் இறந்ததைத் தொடர்ந்து அவரின் மரணத்தின் பின்னணியில் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விஜயனின் குடும்பத்தினர், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமிடம் கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

விஜயனின் மரணம் தொடர்பில் தைப்பிங் சிறைச்சாலை மற்றும் தைப்பிங் மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று விஜயனின் சகோதரி சிசிலியா ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

தைப்பிங் சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் தமது சகோதரர் கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கக்கூடும் என்றும் அவரின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் விலா எலும்பு முறிந்துள்ளது என்றும் சிசிலியா குற்றஞ்சாட்டினார்.

தனது சகோதரன், சிறைச்சாலை வார்டன்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விலா எலும்பு முறிவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை . அவரின் மரணத்திற்கு சிறைச்சாலை இலாகாவே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சுஹாகாமிடம் வழங்கிய மகஜரில் சிசிலியா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து சுஹாகாம் வெளிப்படையிலான விசாரணை நடத்தப்பட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று சிசிலியா கோரிக்கை விடுத்துள்ளார்.

தைப்பிங் சிறைச்சாலையிலிருந்து கடந்து ஜனவரி 24 ஆம் தேதி தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட விஜயன், பிப்ரவரி 15 ஆம் தேதி உயிரிழந்தார்.

WATCH OUR LATEST NEWS